தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதம், மிருதங்கம் மற்றும் வயலின் ஆகிய கலைகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இங்குப் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும் (12-ஆம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்).

3 ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள், இசைக்கல்லூரிகளில் நேரடியாக 3-ஆம் ஆண்டு பட்டயப் படிப்பில் (Diploma) சேர முடியும். இப் பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண வசதி மற்றும் இலவச விடுதி வசதி செய்து தரப்படும்.

மூன்று ஆண்டுகள் பயின்று அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. திருக்கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

பரதம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகவும் தனியார் நிறுவனங்கள் அமைத்து சுய வேலை வாய்ப்பாகவும் பயன் பெறுகின்றனர். கச்சேரிகளில் பங்கு பெற்று பயன் பெறுகின்றனர்.

ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி தூத்துக்குடி என்ற முகவரியிலும், தொலைபேசி 94877 39296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.