சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ் (58). இவர் ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ் மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றித் தீவைத்து எறித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். இச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் ராஜின் கெடுபிடிகள் மற்றும் கொடுமைகளால் ஆத்திரமடைந்த அவரது மனைவி செல்வராணி (32), தனது ஆண் நண்பரான தேவா என்பவருடன் இணைந்து இக் கொடூரக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. சம்பவத்தன்று செல்வராணி, கணவர் ராஜிற்குத் தூக்க மாத்திரை கலந்த உணவைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.

பின்னர், தேவா உதவியுடன் அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொன்றது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, கொலையில் தொடர்புடைய வழக்கறிஞர் செல்வராணியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இக் கொலையில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள தேவாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.