ரோகித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு இந்திய டி20 அணியின் முழுநேரக் கேப்டனாகப் பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையில், இந்திய அணி 50 போட்டிகளில் விளையாடி 42 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்குச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், சமீபகாலமாக ஐ.பி.எல். போட்டிகள் உட்படச் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் செயல்திறன் மந்தமாக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதுகுறித்துச் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில்: "அணியில் எனது பெயர் இல்லாததைப் பார்த்தபோது எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். 2028 ஒலிம்பிக் மற்றும் அடுத்த டி20 உலகக்கோப்பைக்காகத் தயாராகி வந்தநிலையில், இதுபோன்ற மாற்றம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எனது தலைமையில் அணி ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தந்தும் இந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. இது ஏமாற்றமளித்தாலும், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது எனக்கு எந்தக் கசப்பும் இல்லை; அவர் திறமையான கேப்டன்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, அதற்கான அணுகுமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே எனது தோல்விக்குக் காரணம். அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்காக விளையாடத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.

35 வயதான சூர்யகுமார் யாதவ் இதுவரை 113 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 25 அரைசதங்களுடன் 3,273 ரன்களும், 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 773 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.