திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாளை (சனிக்கிழமை, நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் எனவும், தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாதது ஏன்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், "மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கை உண்மையை மூடி மறைக்கும் செயலாகும். புதிய இடத்தில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் ஒத்துழைக்கவில்லை என ஆட்சியர் குற்றம் சாட்டுகிறார்; ஆனால் தீபம் ஏற்றாததற்கும் தேவஸ்தான அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை.
அறங்காவலர் குழுவில் உள்ள 5 பேரில் ஹிந்து அல்லாதவரும், தீபம் ஏற்றுவதற்கு எதிராகப் போராடியவரும் உள்ளனர். அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் காரணத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாதவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகை திருநாள் 11 நாட்கள் நடைபெறுவதால் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை தரப்பில் வாதிடுகையில், "தீபத்தூணில் ஆய்வு செய்யப் போலீசார் அனுமதிக்கவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலான குழு அமைத்துத் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இனி தமிழக போலீசார் இதில் தலையிடக் கூடாது; நாளை தீபம் ஏற்ற இன்றே உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் தரப்பில், "உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த 5,790 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன" என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், "இவையெல்லாம் உண்மையான கண்ணீரா, இல்லை முதலைக்கண்ணீரா என்று நாங்கள் பார்க்கிறோம்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பாஞ்சோலி ஆகியோர் பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியுள்ளதாவது: "அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடுமையான மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அமைதியாக இருக்காது; உத்தரவுகளை மென்மையாகக் கையாளுவதை ஏற்க முடியாது. இவற்றை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய தருணம் வந்துவிட்டது. எவ்வித அனுதாபமுமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருப்பது அரசமைப்பைச் சீர்குலைக்கும் முயற்சி. எந்த அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது. உத்தரவை வேண்டுமென்றே மீறிவிட்டு மாநில அரசு அளித்துள்ள அறிக்கை மனசாட்சியை உலுக்குகிறது.
மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரிக்கிறோம். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
நவம்பர் 24-ஆம் தேதி தீபம் ஏற்றப்படாத நிலையில், நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும். தர்காவைத் தாண்டி 50 மீட்டர் சுற்றளவில் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கலாம்." இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

