திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா விவகாரத்தால் மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தாழையூத்து பகுதியில் காவல்துறையினர் இன்று (நவம்பர் 24) தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகைத் திருநாளான இன்று (நவம்பர் 24) ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், நாளை (நவம்பர் 25) மாலை 6 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். இதனிடையே, அவர் மதுரைக்குப் புறப்பட்டபோது தாழையூத்து பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரைக் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை குறித்துத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும், மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லப் புறப்பட்ட தன்னைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.