"திமுக ஆட்சியில் விதை விதைத்து உருவாக்கப்பட்ட திட்டங்களைத் திறந்து வைத்து, தவெகவினர் ரீல்ஸ் மூலம் சுயதம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்" என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "2021 முதல் 2026 வரை திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தூத்துக்குடி தொகுதியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்குத் தற்போது திறப்பு விழா நடத்தித் தவெகவினர் சுயதம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்குத் தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் திறப்பு விழா நடத்தலாம்; ஆனால் வரலாற்று உண்மைகளை ஒருபோதும் மாற்றி எழுதிவிட முடியாது.

தங்கம்மாள்புரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியின் புதிய கட்டடம், அய்யன்கோவில் தெருவில் புதிய எரிவாயுத் தகனமேடைக் கட்டடம், டைமண்ட் காலனி எப்சிஐ குடோன் பகுதியில் பக்கவாட்டுச் சுவர் மற்றும் பாலம் அமைக்கும் பணி, கந்தன் காலனியில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள், சீரமைக்கப்பட்ட கோக்கூர் குளம், குரூஸ்புரத்தில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள், செயின்ட் மேரிஸ் காலனியில் புதிதாகக் கட்டப்பட்ட பூங்கா, சிறுபாடு கிராமத்தில் நியாயவிலைக் கடை,

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ஹவுசிங் போர்டு காலனி, திரேஸ் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் மற்றும் சுனாமி காலனியில் கட்டப்பட்ட அங்கன்வாடிக் கட்டிடங்கள், குருக்குச்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சமையலறைக் கட்டிடம், படர்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, இவை அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட பணிகளாகும்.

திட்டமிட்டது திமுக! நிதி ஒதுக்கியது திமுக! பணிகளைச் செயல்படுத்தியது திமுக! ஆனால், தற்போது திறப்பு விழா நடத்திவிட்டு அந்தச் சாதனைகளைத் தங்களின் சாதனைகளாகக் காட்டிக்கொள்வது தவெகவின் அரசியல் பாணியாக இருக்கலாம்.

திட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், அத்திட்டங்களுக்காக உழைத்தவர்களின் பங்களிப்பை மறைத்துவிட்டு வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக எழுதிவிட முடியாது. வெறும் ரிப்பன் வெட்டியதால் மட்டுமே ஒருவர் ஒரு திட்டத்தின் சாதனைக்குச் சொந்தக்காரராகிவிட முடியாது. உண்மையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதைத் தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள்" என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.