தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வராஜ் (40). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பண்டு கரை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பழுதடைந்த சாலையில் இருந்த ஆழமான குழியில் தவறி விழுந்துள்ளார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணக்குழிகளாக மாறிய சாலைகள்
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அமைத்த பல சாலைகள் தரமின்றி போடப்பட்டதால், சிறு மழைக்குக் கூட தாங்காமல் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு மரணக்குழிகளாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பண்டுகரை சாலையில் பல இடங்களில் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளதாகவும், இரவு நேரத்தில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த டிரைவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் பணிச்சுமை இருப்பதாக கூறப்படுகிறது. செல்வராஜ் தொடர்ந்து பணிசெய்து வந்ததால் அவர் அசதியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் பைக் விபத்தில் உயிரிழந்துள்ளது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

