தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் சமத்துவபுரம் அருகே உள்ள உபரிநீர் ஓடையில் சட்டவிரோதமாகக் கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயமும், மழைக்காலத்தில் வெள்ளப் பேரபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் காமராஜர் நற்பணி மன்றத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓடையில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், செத்த விலங்குகள் மிதப்பதாலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் மணல் மேடுகளால் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் ஊருக்குள் பாயும் அபாயம் உள்ளது.
எனவே, ஓடையை உடனடியாகச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறினால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

