தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுத்து, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ள நிலையில், உப்பாத்து ஓடை ரவுண்டானா முதல் தோப்புத் தெரு வரையிலான சாலையில் கனரக லாரிகள் விதிமுறையின்றி நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் விபத்துகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆபத்தான சாலைத் தடுப்பு இடைவெளிகளை அடைத்து, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாகனத் திருப்புமுனை அமைக்க வேண்டும். உப்பாத்து ஓடை பெட்ரோல் பங்க் அருகே உள்ள மட்டுக்கல்லை உடனடியாக அகற்ற வேண்டும். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள கண்டெய்னர் லாரி செட்டுகளை வெளிப்பகுதிக்கு மாற்ற வேண்டும்.
சாலையின் இருபுறமும் குவிந்துள்ள மணலை அவ்வப்போது அகற்ற வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முத்தையாபுரம் ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

