தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அப் மனுவில், "மார்க்கண்டேயன் தனது மனைவி பெயரில் வாங்கிய சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும். எனவே, அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கக் கோரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் ஆளுநருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இப் பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இவ் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தனியாகத் தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், "குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மட்டுமே தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்ய முடியும் என்ற சட்ட விதி இருக்கும்போது, காலதாமதமாகத் தேர்தல் வழக்குத் தொடர நாங்கள் எப்படி அனுமதி அளிக்க முடியும்? சட்டத்தை வளைக்கப் பார்க்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியதுடன், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.