தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தசரா திருவிழா ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் கள்ளச்சாராயத் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார்.

குலசேகரப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தசரா திருவிழாவை முன்னிட்டுப் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்துச் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதுடன், விபத்துகளைத் தவிர்க்கச் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காவல் துறைக்கு உத்தவிடப்பட்டது.

மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைச் சாவடிகளில் சோதனைகளை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை, கனிம வளத் துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.