கர்நாடக மாநிலத்தின் முதன்மைப் பண்டிகையான தசரா விழா வரும் அக்டோபர் 11, 2026 முதல் அக்டோபர் 21, 2026 வரை 10 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இக் காலக்கட்டத்தில் தொடர் விடுமுறை வருவதால், பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு வழியாகச் செல்லும் அனைத்து வழக்கமான ரயில்களிலும் பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து, காத்திருப்போர் பட்டியல் 'Regret' நிலையை அடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பயணிகளின் கடுமையான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வே உடனடியாகப் பின்வரும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:
பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு ரயில்: ஓசூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக இயக்கம்.
ஹூப்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரயில்: தாவணகெரே, அரசிகெரே, பெங்களூரு, ஓசூர், சேலம், மதுரை வழியாக இயக்கம்.
இச்சிறப்பு ரயில்கள் குமரி முனை வரை இயக்கப்படும் பட்சத்தில், வட தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு மற்றும் தென் தமிழ்நாடு என மாநிலத்தின் அனைத்துப் பிராந்திய மக்களும் நேரடியாகப் பயனடைவர். எனவே, ரயில்வே நிர்வாகம் பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இச் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

