திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அஞ்சலை (60). விடுமுறை தினம் என்பதால் பழனிசாமியின் தோட்டத்து வீட்டில் மகன் மற்றும் மகள்களின் குழந்தைகள் வந்து தங்கியிருந்தனர்.
நேற்று மதியம் 2 மணியளவில், ஆடுகளை மேய்ச்சலுக்காகப் புத்தூர் கணவாய்மேடு பகுதிக்கு அஞ்சலை அழைத்துச் சென்றார். அவருடன் பேரன் மோஷி கிரண் (6), பேத்திகள் யோகவர்ஷினி (11), அனன்யா (6), தனுஸ்ரீ (3) உட்பட 6 சிறுவர்கள் சென்றனர். கணவாய்மேடு சாலையோரப் பகுதியில் ஆடுகளை மேயவிட்டு, பேரன், பேத்திகளுடன் அஞ்சலை அங்கிருந்த திண்டு போன்ற தடுப்பில் அமர்ந்திருந்தார்.
அப்போது கொல்லப்பட்டியில் இருந்து புத்தூர் நோக்கி அதிவேகமாகத் தறிகெட்டு வந்த பால் வேன் ஒன்று திடீரென இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அஞ்சலை, யோகவர்ஷினி, அனன்யா, மோஷிகிரண், தனுஸ்ரீ ஆகிய 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவர்-சிறுமிகளான யோகவர்ஷினி, அனன்யா, மோஷிகிரண், தனுஸ்ரீ ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி அஞ்சலைக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திவிட்டுச் தப்பிய பால் வேன் டிரைவர் குருந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (29), வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து வேனையும் பறிமுதல் செய்தனர். டிரைவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

