தென்காசி மாவட்டம் வெங்கடம்பட்டி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கம்மலை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த 6-ஆம் வகுப்பு சிறுமி தீபிகாவிற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வரும் நிலையில், ஆலங்குளம் ஹரி பிரியாணி உணவகம் சார்பில் சிறுமியின் குடும்பத்தினருக்குச் சிறப்பு அசைவ விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த தங்கக் கம்மல் ஒன்றைக்கண்டெடுத்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்தத் தங்கக் கம்மலை உரியவரிடம் காந்திய நேர்மையுடன் ஒப்படைத்தார்.
சிறுமியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி சால்வைகள், ரொக்கப் பரிசுகள், கேடயங்கள் மற்றும் மேடைகள் வழங்கி சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆலங்குளம் ஹரி பிரியாணி ஹோட்டல் உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், சிறுமி தீபிகா, அவரது தாய் ஜெயந்தி, தந்தை திரவியக்கனி மற்றும் அவரது சகோதரனை ஆலங்குளத்திற்கு நேரில் வரவழைத்தார்.
அவர்களை அன்போடு வரவேற்ற ஹரி பிரியாணி நிர்வாகம், சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட சுவையான அசைவ விருந்து அளித்து உபசரித்தது. மேலும், ஹரி பிரியாணி அதிபர் ஹரி சிறுமிக்கு ஐஸ்கிரீம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சமூக சேவகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், இன்ஜினியர் க. பார்த்திபன், வி.எஸ். மணியன் ஆகியோர் உடனிருந்து சிறுமியை வாழ்த்தினர்.
நேர்மையான குணத்திற்கும் சத்திய வாழ்விற்கும் சமூகத்தில் எப்போதும் நல்மதிப்பு கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத இந்தச் சிறுமியைப் போலத் தங்கள் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புவதோடு, இச்சிறுமியின் நேர்மை குறித்த தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பார்வைக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

