தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, சட்டசபையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்குக் கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத் தேர்தலில், இரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி: கடந்த பொதுத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், இம்முறை தவெக வேட்பாளராகக் களமிறங்கி 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதி: கடந்த தேர்தலில் அஇஅதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா, இத்தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்டு 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துள்ளார்.
இத் தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக முதலிடத்தையும், திமுக இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அஇஅதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.
சட்டசபை பலம் நிலவரம்:
இவ் இரட்டை வெற்றியின் மூலம் 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டசபையில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலமான 118 இடங்களை அடைய அக்கட்சிக்கு இன்னும் 9 இடங்கள் தேவையாக உள்ளன. தற்போது காலியாக உள்ள எஞ்சிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றாலும் தவெகவின் பலம் 114 ஆக மட்டுமே உயரும் என்பதால், தற்போதைய சூழலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சிப் பயணம் தொடரும் நிலை நீடிக்கிறது.
இருப்பினும், ஆட்சி அமைத்த 4 மாதங்களிலேயே அஇஅதிமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது தவெகவின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்து வருவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

