மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி. கூறியதாவது: நிச்சயமாக நியாயத்திற்கு ஒரு வெற்றி கிடைக்கும். மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய த.வெ.க-விற்கு ஒரு பாடம் சொல்லித் தரக்கூடிய அளவிற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அவர்களின் கூட்டணியில் இருக்கக்கூடியவர்களே த.வெ.க-வைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்குத்தான் அவர்கள் நேர்மையான, தூய சக்தி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் எந்தத் தவறும் செய்யப்போவதில்லை என மேடைக்கு மேடை பெருமையாகப் பேசினால் மட்டும் போதாது; உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, பாதுகாப்பு இல்லை, குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் அச்சத்தோடு வாழக்கூடிய சூழலே நிலவுகிறது.

எந்தவித வளர்ச்சிக்கான திட்டங்களோ, தொழில் முதலீடுகளோ கிடையாது. இதில் மக்களை ஏமாற்றி நாங்கள் தூய சக்தி என்று கூறி வருகிறார்கள். அதேபோல மக்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்குப் பணம் எங்கிருந்து வருகிறது? இப்படிப்பட்டவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தலுக்கே வந்து அதிகமாகப் பிரச்சாரம் செய்யாத ஒரு முதலமைச்சர், தற்போது தெருத் தெருவாகப் போய்ப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், தம்பி விஜய்க்கு நிச்சயமாகத் தேர்தலில் ஒரு பயம் வந்துவிட்டது என்பதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது" எனக் கூறினார்.