திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதுமுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் நீரை உறிஞ்சுவதுடன், அப்பகுதியில் உள்ள இயற்கையான தாவரங்கள் வளர்வதற்கும் தடையாக அமைகின்றன. மேலும், இம்மரங்கள் அடர்த்தியாக வளர்வதால் நீர்நிலைகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளின் இயற்கைச் சூழலியல் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கும் இடையூறு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், தாமிரபரணி ஆற்றின் இயற்கைச் சூழலை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, வட்டாட்சியர்கள் மாரிராஜா (பாளையங்கோட்டை), பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

