வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கு நன்னீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து அகற்றுதல், கொசுப்புழுக்களை அழித்தல் மற்றும் புகை மருந்து (Fogging) அடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் 212 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் (Domestic Breeding Checkers - DBCs) மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியாளர்கள், உரிய இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் மூலம் இந்நோய் பரவல் தடுப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகள் வரும் நாட்களிலும் தொய்வின்றி நடைபெற, மாநகராட்சியிலிருந்து வீடு தேடி வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.