கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முழுச் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அலட்சியமாகச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இங்குச் செயல்பட்டு வரும் கையுறை தயாரிப்பு நிறுவனம், மீன்வலை பின்னும் நிறுவனம் மற்றும் நான்கு சக்கர வாகனப் பணிமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத் தொழிற்சாலை வளாகங்களில் கொசு பெருக்கத்திற்குக் காரணமான கழிவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது சுகாதார வழிமுறைகளைக் முறையாகப் பின்பற்றாத ஒரு நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டித்துச் சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட மற்றொரு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இராணித்தோட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள பழைய டயர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத பேருந்து உதிரிபாகங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், புகை மருந்து தெளித்தல் மற்றும் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் மருத்துவர் சரோஜா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.