மேனுவல் தட்டச்சுத் தேர்வுகளைக் கணினி முறைக்கு மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தட்டச்சுப் பள்ளிகளின் சங்கம் சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வித் தேர்வு (GTE) விடைத்தாள் திருத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் வலியுறுத்தி, தட்டச்சுப் பள்ளிகள் சங்கத் தலைவர் டாக்டர் கே. சுரேஷ் குமார் தலைமையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில், மேனுவல் டைப்ரைட்டர் மூலம் நடைபெறும் பாரம்பரியத் தட்டச்சுத் தேர்வுகளைக் கணினி வழி முறைக்கு மாற்றும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந் நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 5,000 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 55,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாவதோடு, சுமார் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமும் நேரடியாகப் பாதிக்கப்படும் எனச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்வு முறைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாணை எண் 187 (தேதி: 28-10-2024)-ன் படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ள 'தமிழ் 99' விசைப்பலகை முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
பாரம்பரிய மேனுவல் டைப்ரைட்டர் முறையிலேயே தட்டச்சுத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.முறைகேடு தடுப்புக் குழு (Malpractice Committee) விசாரணை முறை, மறுதிருத்தம் (Revaluation) வசதி நீக்கப்பட்டது, தேர்வுப் பணி சன்மானம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் தவறான தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
எனவே, தட்டச்சுப் பள்ளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சங்கத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

