பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது மறைந்த சகோதரரின் மனைவி அமுதா (48). அமுதா தனது தாய் சங்கரம்மாள் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அமுதாவும் அவரது தாயாரும் அறையில் தூங்கச் சென்ற நிலையில், அவரது மகள் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறச் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த அமுதாவின் கழுத்தில் இருந்த நகையைத் திருட முயன்றுள்ளான்.
அமுதா அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே, அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் ஓடி வந்தார். இதனால் பயந்துபோன அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து நம்பிராஜன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில் அமுதா வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கும் ஊழியர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மேலப்பாளையம் மேத்தமார் பாளையம் 3-வது தெருவைச் சேர்ந்த செய்யது மகன் அஸ்ரப் அலி (25) என்பதும், அவரே அமுதா வீட்டிற்குள் புகுந்து நகை பறிக்க முயன்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

