கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், திருவட்டார் வட்டம் கண்ணனூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி அவர்கள் முன்னிலையில் இன்று (09.09.2026) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்து பல்துறை பணி விளக்க அரங்குகளை பார்வையிட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மாதந்தோறும் தாலுகா வாரியாக மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். இன்று நடைபெற்ற முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பகுதிக்கான அடிப்படைத் தேவைகள், வருவாய்த்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம், வெற்றி வீடு வழங்கும் திட்டம், சூப்பர் கேம்பஸ் திட்டம், வெற்றி திறன் பயிற்சித்திட்ட உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

நமது மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி நகராட்சியினை நெடுஞ்சாலைத்துறை பங்களிப்புடன் சாலைகளை புதுப்பிப்பது, பேச்சிப்பாறை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.13 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் வகையில் நவீன வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, விரைவில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, நிறைவேற்றபடவுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.2.02 இலட்சம் மதிப்பில் அழகுநிலையம் அமைப்பதற்கான காசோலையும், 1 பயனாளிக்கு ரூ.6.21 இலட்சம் மதிப்பில் மாவு மில் அமைப்பதற்கான காசோலையும், வேளாண்மைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.6000 மானியத்தில் விசைத்தெளிப்பானும், தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் அவகேடோ பரப்பு விரிவாக்கத்திற்காக 1 பயனாளிக்கு ரூ.12,000 மானியமும், 22 பயனாளிகளுக்கு ரூ.4.20 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு உதவித்தொகைகான ஆணையும், 5 பயனாளிக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், 109 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகான ஆணையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 2 பயனாளிக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2 பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டை என 145 பயனாளிகளுக்கு ரூ.24.91 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பேசினார்கள்.

முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணிவிளக்க அரங்கினை பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர், தனித்துணை ஆட்சியர் சரவணன், இணை இயக்குநர் வேளாண்மை வாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிவகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட சமுகநல அலுவலர் காயத்திரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமதி, திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.