தூத்துக்குடி மாவட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் குளங்களைப் பராமரிப்பது மற்றும் குடிநீர் விநியோகச் சீரமைப்புப் பணிகள் குறித்துக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நீர்வளத் துறை ஆகிய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பெ.மதன்ராஜா பேசியதாவது: "தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 குளங்களை NDSO, EFI போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் CSR நிதி உதவியுடன் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தூர்வாரிச் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 3 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் சீராக வராத பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாகத் தண்ணீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும், பொது நிதி மற்றும் இயற்கை பேரிடர் நிதி உதவியுடன் குளங்களைச் சீரமைப்பதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தெருவிளக்குகள் அமைப்பது மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (வளர்ச்சி) மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் (மின்சாரம்) ஆகியோருடன் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

