வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாகக் குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளைச் சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் சுமார் 2.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாதத்தின் 4-வது சனிக்கிழமையான செப்டம்பர் 26 மற்றும் அடுத்த நாளான செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களுடன், இத் தொடர் வேலைநிறுத்தமும் இணைந்தால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிப் பணிகள் முடங்கும் சூழல் உருவானது.

தொடர் விடுமுறையால் வணிகர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும், மண்டல ஊரக வங்கிகளும் (Regional Rural Banks) வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந் நடவடிக்கையால் பொதுமக்களின் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.