திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவுடன் வழங்கப்பட்டு வந்த முட்டை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
குறிப்பாக நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 'சத்துணவுத் திட்டமாக' விரிவுபடுத்தப்பட்ட இத் திட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1989-ஆம் ஆண்டு வாரத்திற்கு ஒரு முட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தார்.
அதன்பின்னர், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்கும் நோக்கில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக எவ்விதத் தடையுமின்றி சீராக வழங்கப்பட்டு வந்த இச் சத்துணவு முட்டைகள், த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலைக்குப் பின் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவோடு சேர்த்து முட்டை வழங்கப்படாததன் பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டை கொள்முதல் முறையாக நடைபெறாததும், சமூக நலத்துறை முற்றிலுமாக முடங்கியிருப்பதுமே முக்கியக் காரணம் எனத் தெரியவருகிறது.
'மாற்றம், மாற்றம்' எனத் தம்பட்டம் அடிக்கும் த.வெ.க. அரசு, சத்துணவைச் சத்தில்லாத உணவாக மாற்றி மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றத்தின் மொத்த வடிவமாகத் திகழ்கிறது.
காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரால் பார்த்துப் பார்த்துக் கொண்டு வரப்பட்ட முத்திரைத் திட்டங்களையே சீராகச் செயல்படுத்த முடியாத நிர்வாகத் திறனற்ற த.வெ.க. அரசு, முட்டை விநியோகத்தை உடனடியாகச் சீர்செய்ய வேண்டும் எனத் துறை அமைச்சரையும், தமிழக முதலமைச்சரையும் வலியுறுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

