தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் சமத்துவபுரம் பகுதியில் கடந்த பல நாட்களாகக் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூடத் தண்ணீரின்றி அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்தவிதச் சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், உடனடியாகக் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கக் கோரியும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மேலும், அமைச்சர் மதன்ராஜாவின் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மக்கள் அன்றாடத் தேவைகளுக்குத் தவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.