கழுகுமலையில் சார்பதிவாளரைக் கண்டித்து திருவேங்கடம் வட்டார மதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரரூராட்சிப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான வேலாயுதபுரம், கூழையதேவன்பட்டி, கரடிகுளம், பழங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில், "தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் இல்லாமல் செயல்படும் த.வெ.க அரசிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கழுகுமலை சார்பதிவாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 'என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, துறை ரீதியாக அதிகாரிகள் எனக்கு உதவி செய்வார்கள்' என ஆணவத்துடன் பேசி வரும் சார்பதிவாளர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட காரசாரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இச் சம்பவம் குறித்து கழுகுமலை சார்பதிவாளர் மகேஷ்குமார், கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி வழக்குப் பதிவு செய்து, போஸ்டர் ஒட்டிய நபர்கள் யார் என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கழுகுமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

