நாகர்கோவில் கோட்டார் கேப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்கள் மிகவும் பழமை வாய்ந்தவை என்பதால், அவற்றில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வீணாக வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்வே சாலை சந்திப்பில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், ஈத்தாமொழி சாலை சந்திப்பில் உள்ள விநாயகர் கோவில் முன்பும் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இரவு முழுவதும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறியும் அதைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று காலையில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி சேறும் சகதியுமானது. இதனால் அப்பகுதியில் பெரிய பள்ளமும் உருவானது.
இந்நிலையில், வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் தேங்கியிருந்த அந்தப் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. பேருந்தை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த ஊழியர்கள் மீட்பு வாகனத்தின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்தை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் கோட்டார் கேப் சாலையில் சுமார் 1½ மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவல்துறையினர், வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து வந்த வாகனங்களை ரயில்வே சாலை வழியாகத் திருப்பி விட்டனர். பேருந்து மீட்கப்பட்ட பின்னரும், சாலையில் இருந்த பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்பிச் சீரமைத்தனர். அதன்பின்னரே அப்பகுதியில் இயல்புப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

