தென் மாவட்ட மக்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வான தாய்மாமன் சீர்வரிசையில், மதுரையைச் சேர்ந்த தாய்மாமன் ஒருவர் ரூ. 60 லட்சம் ரொக்க மொய், 50 பவுன் தங்கம் மற்றும் லாரி நிறையச் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி ஊரையே பிரமிக்க வைத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெறும் காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா மற்றும் திருமணங்களின் போது தாய்மாமன் சீர் வழங்குவது என்பது அன்பின் அடையாளமாகவும் கௌரவத்தின் வெளிப்பாடாகவும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, உசிலம்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் இச்சீர்வரிசை மிக விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மதுரை சூர்யா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், அச்சிறுமியின் தாத்தா மற்றும் தாய்மாமன் சார்பில் பிரமாண்டச் சீர்வரிசை வழங்கப்பட்டது.

இதில், ரூ. 500 தாள்கள் கொண்ட கட்டுகளாக மொத்தம் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் பெட்டி பெட்டியாகத் தலையில் சுமந்து வரப்பட்டு மொய்யாக வழங்கப்பட்டது. இதுதவிர 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வைரம் பாய்ந்த நெக்லஸ், நவீன சொகுசு கார் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லாரி நிறையக் கொண்டு வரப்பட்ட 500 வகையான சீர்தட்டுகள், 500 மூட்டை அரிசி, 50 கரும்பு கட்டுகள் மற்றும் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுச் சீராக வழங்கப்பட்டன.

இவ்வளவு பிரமாண்டமாக வழங்கப்பட்ட தாய்மாமன் சீர்வரிசை மற்றும் மொய் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. "தாய்மாமன் சீர்னா இப்படிதான் இருக்கணும்" என்றும், "காதணி விழாவுக்கே இவ்வளவு என்றால் திருமணத்திற்கு எந்த அளவுக்குச் செய்வார்களோ!" என்றும் நெட்டிசன்கள் வியப்புடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.