தமிழகத்தில் திறமையான பேச்சுவார்த்தை இல்லாததால் ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய நிறுவனங்களின் முதலீடு அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது: "திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ரியாலிட்டி செக் (Reality Check).
ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின் (Hwashin), செஷான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு கைநழுவி ஆந்திராவிற்குச் சென்றிருப்பது விஜய் தலைமையிலான அரசின் தொழில்துறை மந்தநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது."
தொடர்ந்து தனது பதிவில், "புதிய முதலீடுகளை ஈர்க்கிறோம் என வெளிநாடுகளுக்குச் சென்று போட்டோஷூட் நடத்திச் சமூக வலைதளங்களில் 'வைப்' ஏற்றுவதில் முதலமைச்சர் தீவிரமாக இருக்கிறார். ஆனால் கையில் இருக்கும் வெண்ணெயை நழுவவிட்டு நெய்க்கு ஊர் சுற்றும் கதையாக, வாசலில் நின்ற நிறுவனங்களையே தக்கவைக்கத் திராணியின்றி தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திர அரசு திட்டமிட்டு முதலீடுகளைத் தட்டிச் சென்றபோது, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என்ன செய்து கொண்டிருந்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாகத் தமிழக இளைஞர்களுக்கான 1,400-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பலன்களும் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வெற்று வெளிநாட்டு பிம்ப அரசியலை விடுத்து உண்மையான ஆளுகையை (Real Governance) நோக்கியும், தொழில்களைக் காக்கும் வகையிலும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

