தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கச் சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதாடுகையில்,"இந்த வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமாரைக் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். மேலும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான சரவணன் நேற்று சரணடைந்துள்ளார். எனவே, அன்பில் மகேஷ் ஜாமீன் மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போலீஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.