தமிழகத்தில் த.வெ.க. அரசு, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வருகிறது. இதில் காங்கிரஸைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், விஸ்வநாதன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், சட்டசபை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசும் த.வெ.க. அமைச்சர்கள் பலர், "தமிழகத்தின் இன்றைய முதல்வர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்" என்று பேசி வருவது கூட்டணி கட்சியான காங்கிரஸை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் பதவியேற்பு விழா குழித்துறை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: "எங்களது தலைவர் ராகுல் காந்தி வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பிரதமராவார். ஒருவேளை தமிழக வெற்றிப் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் த.வெ.க. அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம்.
எங்களுக்குக் காங்கிரஸ் கட்சிதான் பெரியது. கட்சித் தலைமை நாளை பதவியை விட்டு விலகச் சொன்னால், அதை உடனடியாகச் செய்வோம். ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே எங்களின் சபதம்" என்று ஆவேசமாகப் பேசினார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியலிலும், ஆளும் த.வெ.க. கூட்டணியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

