சென்னை காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சேகர்பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் விசாரணைக்காகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது, காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருடன் சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
சம்மனை ஏற்று நேற்று காலை 10.30 மணியளவில் வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு உதவி ஆணையர் முன்னிலையில் காவல்துறையினர் அவரிடம் சுமார் 2.30 மணி நேரம் விரிவான விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளரின் அணுகுமுறை சரியில்லாத காரணத்தினாலேயே பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் காவல்துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் நிச்சயமாக வந்து முழு ஒத்துழைப்பு அளிப்பேன். காவல்துறையினர் நேர்மையாக விசாரணை நடத்தினர்; என்னைத் துன்புறுத்தவில்லை. அதேவேளையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் முக்கியச் சம்பவங்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலேயே இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன." என்றார்.

