வரும் 2029 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெகவின் சமூக வலைத்தள மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார், வருகிற 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் தவெக அரசில் அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யோ, அல்லது மூத்த நிர்வாகிகளோ சமூக ஊடகங்களில் உலாவும் செய்தியை மறுத்தோ, விளக்கம் அளித்தோ எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி பிரவீண் சக்கரவர்த்தியும் முதல்வரை சந்தித்தார்.

