மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த உலகளாவிய பின்டெக் திருவிழா அரங்கில், பிரதமர் அலுவலக போலி அதிகாரி மற்றும் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மற்றொரு நபரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
நிதி தொழில்நுட்பத் துறையின் உலகளாவிய பின்டெக் திருவிழா மாநாடு மும்பை நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் தொடங்கியது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி மாலையில் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்ற இருந்ததால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, கூட்ட அரங்கு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் ஒருவர் தான் பிரதமர் அலுவலக (PMO) அதிகாரி எனக் கூறிக்கொண்டார். பாதுகாப்புப் படையினர் அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவரையும், அவருடன் துப்பாக்கியுடன் இருந்த மற்றொரு நபளையும் பிடித்து மும்பை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், போலி அதிகாரியாக வந்தது 24 வயதுடைய ரோகன் பாரெக் என்பது தெரியவந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் இவர்கள் பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறிக்கொண்டு கூட்ட அரங்குள் நுழைந்துள்ளனர்.
இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள், இதன் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

