கர்நாடக பாஜகவிலிருந்து தமிழகத்திற்கு வந்து 2024 முதல் திருச்சியில் வசித்து வரும் பாஜக பெண் நிர்வாகி ஒருவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் : கருப்பு முருகானந்தம் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களில் பாதுகாவலராகத் தன் பெயரைச் சேர்த்துத் 'டாடி' என்று அழைக்க வைத்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடச் சீட் வாங்கித் தருவதாகக் கூறியதால், பெங்களூரிலிருந்து குழந்தைகளுடன் திருச்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். திருச்சியில் வைத்துத் தன்னை உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகத் துன்புறுத்தியதாகவும், அவருடனான உறவில் கருவுற்ற நிலையில் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்திச் சட்டவிரோதமாகக் கருவைக் கலைக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டை மோசடியாகக் கைப்பற்ற முயன்றதுடன், இதுபற்றிக் கேட்டதற்குத் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான மின்னணு ஆதாரங்கள், ஆடியோக்கள் மற்றும் சாட்சிகளை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, கருப்பு முருகானந்தத்தைப் பதவியிலிருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டார்.

கருப்பு முருகானந்தம் மறுப்பு:

கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருப்பு முருகானந்தம்: "ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றி நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். எவ்வித விசாரணையும் நடத்தாமல் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.