கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் இயங்கி வரும் மலையாளத் தொடக்கப் பள்ளியின் பிரதான நுழைவாயில் முன்பாக நான்கு சக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டப் பதிவு எண் கொண்ட கார் ஒன்று பள்ளியின் பிரதான நுழைவாயிலை முழுமையாக மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பள்ளியின் பிரதான கதவைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டு, காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

மாணவர்கள் தவிப்பதைக் கண்ட பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் உடனடியாக இணைந்து, பள்ளியின் பிரதான இரும்புக் கேட்டை முழுமையாகக் கழற்றி ஓரமாக வைத்தனர். அதன் பின்னரே மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடிந்தது.

பள்ளியின் முன்பு இதுபோன்று வாகனங்களை இடையூறாக நிறுத்திச் செல்வது தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக இதில் தலையிட்டு, பள்ளி நுழைவாயிலில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது அபராதம் விதித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.