கங்கைகொண்டான் அருகே துறையூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (30), துளசி பாலா கேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (40), சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நான்கு வழிச்சாலைக்குட்பட்ட துறையூர் சர்வீஸ் ரோட்டில் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போது, இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கின. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மாயாண்டி மயக்கமடைந்து, எரியும் வாகனத்தின் மீதே விழுந்துகிடந்தார். இதில் அவர் மீது பெட்ரோல் சிந்தியதில் கைகள், கால்கள் உள்ளிட்ட உடற்பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாயாண்டியைத் தீயில் இருந்து மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்தனர். இச்சம்பவம் குறித்துக் கங்கைகொண்டான் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த இருசக்கர வாகனங்களின் தீயை அணைத்துக் கட்டுப்படுத்தினர்.

பின்னர், காயமடைந்த மாயாண்டி மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.