தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் சர்ஃபாக்டன்ட் மருந்து தட்டுப்பாடு நிலவுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, அரசு உடனடியாக தலையிட்டு மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்யவும், அவர்களின் உயிரைக் காக்கவும் பயன்படும் முக்கியமான 'சர்ஃபாக்டன்ட்' மருந்துக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாகச் சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இம்மருந்து கிடைக்காமல் பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இப் பிரச்சனை குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளைக் கூட வழங்க முடியாமல் மக்கள் நல்வாழ்வுத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?
இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் எழுந்துள்ள இத்தொடர் மருந்து தட்டுப்பாடு குறித்துத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

