பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் நூற்றாண்டு பழமையான இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி கோவிலை உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பாகிஸ்தானின் நரோவால், சிராஜ் கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோவில் இடிக்கப்பட்டதாக வெளியாகி உள்ள செய்திகளை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளோம். நூற்றாண்டு பழமையான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த நாசவேலை மிகவும் கண்டிக்கத்தக்கது.
அப்பகுதி அதிகாரிகளின் வெளிப்படையான அலட்சியமும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலைப் பாதுகாக்கத் தவறியதும் பெரும் கவலையை அளிக்கிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்கள், பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக மக்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் மத சுதந்திரம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கடுமையாக மீறப்படுவதையும் தெளிவாக நினைவூட்டுகின்றன." என்று தெரிவித்துள்ளார்.

