திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து. இவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை நீதிமன்றம் அருகே பேச்சிமுத்து தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, யூடியூபர் மதுமிதா அவரது காரில் ஏறியுள்ளார்.
தொடர்ந்து மதுமிதாவை நெல்லை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டுப் பேச்சிமுத்து வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மதுமிதா தான் அதைத் திருடி இருக்க வேண்டும் எனப் பேச்சிமுத்து குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய போலீஸார் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அடுத்த கட்ட விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைக்காகத் திருநெல்வேலி மாவட்டக் காவல் துறைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 2022-ம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் 5 பவுன் நகை மாயமான சம்பவமும் மதுமிதாவைச் சுற்றியே வந்துள்ளது.
அன்றைய காலகட்டத்திலேயே புகார் அளிக்க முயன்றபோது சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதனால் தான் தற்போது தைரியமாக வந்து புகார் அளித்துள்ளதாகவும் பேச்சிமுத்து தரப்பில் காரணம் கூறப்படுகிறது. இருப்பினும், 2022-ல் திருடு போன நகைக்கு 2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் கேள்விகளையும் குழப்பத்தையும் எழுப்பியுள்ளது.

