ஆந்திராவின் நரசாபூர் மற்றும் ஒடிசாவின் பூரி இடையே 'அக்வான்' தீவிர புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நரசாபூர் மற்றும் ஒடிசா மாநிலம் பூரி இடையே அக்வான் தீவிர புயல் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில அரசின் தயார்நிலை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, "உயிரிழப்புகளே இல்லாத நிலையை எட்டுவதே எங்கள் இலக்கு.

சமவெளி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சம் மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் கஜபதி, கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்காங்கிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்" என்றார்.

புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு: மாநில அரசு மொத்தம் 3,000 புயல் பாதுகாப்பு மையங்களை அமைத்துள்ளதாகவும், அவற்றில் 448 மையங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 15 மாவட்டங்களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை: மல்காங்கிரி, கோராபுட், ராயகடா, கலஹண்டி, கஜபதி, கஞ்சம், கந்தமால், பவுத், பூரி, நயாகர் மற்றும் குர்தா ஆகிய 11 மாவட்டங்களில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்குச் சுமார் 100 கி.மீ. என்ற அளவில் வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் புயலை முன்னிட்டு கஞ்சம், கஜபதி, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் கந்தமால் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வியாழன் முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.