தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி மார்க்கெட் கற்பகவீதி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (40). இவர் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா (34), வடநத்தம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று காலை இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். மாலை 3.30 மணி அளவில் முத்துக்குமார் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த செயின், கம்மல் உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 134 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்துப் புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி நமாச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் புளியங்குடி போலீசார், இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.