நெல்லை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள் 3 பேர் அந்த மாணவியை மிரட்டி அவரிடம் இருந்த 4 கிராம் தங்க சங்கிலி, 2 கிராம் கம்மல் ஆகியவற்றையும், அவரது ஆண் நண்பரிடன் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து யாரும் புகார் கொடுக்க முன்வராத நிலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் நெல்லை டவுன் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகார் பெற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவியிடம் நகை பறித்தவர்கள் மானூர் அருகே உள்ள தென்பத்து கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (26) மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மற்றொரு சிறுவன் வேறு ஒரு வழக்கில் சிக்கி கூர்நோக்கு இல்லத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

