சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் இரவு திருநெல்வேலி ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. அப்போது, ரயில்வே தனிப்படை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரயிலில் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்திருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

விசாரணையில், அவர்கள் மேற்கு வங்க மாநிலம் காசிபாரா பகுதியைச் சேர்ந்த சர்தார் பிஸ்வாஸ் (44) மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உர்மிளா சாஹூ (46) என்பதும் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமாக 54 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.27 லட்சம் மதிப்பிலான 54 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தேவையான சட்ட நடைமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்ட பிறகு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களும் மேல் நடவடிக்கைக்காகத் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் கார்த்திகை செல்வி மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.