நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்ட இயக்க இயக்கம் பிரிவு முதுநிலை மேலாளருக்குப் பயணிகள் சார்பாக மனு அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி காலை 07.10 மணிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில் (வண்டி எண்: 56751), செயல்பாட்டுக் காரணங்களால் தினமும் காலை 07.20 மணிக்குத் தான் புறப்பட்டுச் செல்கிறது.
எனவே, பயணிகள் வீணாகக் காத்திருப்பதைத் தவிர்க்கவும், பயணிகளின் நலன் கருதியும் இந்த ரயிலின் அதிகாரப்பூர்வ புறப்படும் நேரத்தைக் காலை 07.20 மணி என ரயில்வே நேர அட்டவணையில் திருத்தி அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 06.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56758), ஸ்ரீவைகுண்டம் நிலையத்தில் 15 நிமிடங்களுக்கும் மேலாக எதிர்வரும் ரயிலைக் கடப்பதற்காக ('கிராசிங்') நிறுத்தி வைக்கப்படுகிறது.
மேலும், மேலப்பாளையம் மற்றும் குறிச்சி பகுதிகளிலும் சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்படுவதால், திட்டமிட்டபடி இரவு 07.45 மணிக்கு நெல்லை வர வேண்டிய ரயில், இரவு 08.10 மணிக்கு மேல் தான் வந்து சேருகிறது.
இதனைத் தவிர்க்க, பழைய நடைமுறைப்படி இப் பயணிகள் ரயிலைத் திருச்செந்தூரில் இருந்து மாலை 05.55 மணிக்குத் தொடங்கி, செய்துங்கநல்லூரில் கிராசிங்கை முடித்து, நெல்லை சந்திப்பிற்கு இரவு 07.40 மணிக்குள் வந்து சேருமாறு நேர அட்டவணையை மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் பிற தொலைதூர தொடர் ரயில்களை எளிதாகப் பிடிக்க ஏதுவாக இருக்கும். இத்துடன், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் போதிய மின்விளக்கு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் அக் கோரிக்கை மனுவில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

