சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதன் தலைவர்கள் குறித்துப் பேசி அவையின் மாண்பைக் கொச்சைப்படுத்திய முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பொருளாதார மேதை முரசொலி மாறன் மற்றும் மிசா அவசரநிலைச் சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது.

அரசியல் வரலாற்றில் இத்தகைய அருவருப்பான உரையைச் சட்டமன்றம் இதுவரை கண்டதில்லை. அவரது உரை மூலமாகச் சட்டமன்றத்தின் மாண்பு, மரபு மற்றும் வரலாறு ஆகியவை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஆட்சியின் தோல்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் நிலைக்கு முதலமைச்சர் விஜய் மாறியுள்ளார்.

சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, அதனை 'மீம்ஸ்' மற்றும் 'ரீல்ஸ்'-ஆக வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களைச் சென்றடைந்த பிறகு, அதனை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாகச் சட்டசபையைத் தந்திர மேடையாகத் த.வெ.க. அரசு பயன்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் இத்தகைய பேச்சைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 12.09.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரளாகப் பங்கேற்று முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்துக் கண்டனக் குரல் எழுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர்.