தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மயான பயன்பாட்டிற்காக அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை உள்ளிட்ட வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த மயானத்திற்குச் செல்வதற்கு முறையான சாலை வசதி இதுவரை அமைத்துத் தரப்படவில்லை. இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாகப் பருவமழைக் காலங்களில் யாரேனும் உயிரிழந்தால், மயானத்திற்குச் செல்லும் வழிப் பாதை மோசமடைவதால் சடலங்களைத் தலையில் சுமந்து கொண்டு சேறும் சகதியுமான பாதையில் செல்ல வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை நேரில் ஆய்வு செய்து, மயானத்திற்குச் செல்லும் பாதையில் விரைந்து தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.