தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் பிரம்மாண்டமான ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை சார்பில் 2024 ஜூன் 13 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் கடந்த ஜூலை 18 அன்று மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை அளித்த புகார்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு (சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனை நடைபெறுகிறது. இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தினத்தின் இல்லம், அலுவலகங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் 5 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மணல் குவாரி அதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 30 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது.
முன்னதாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடைபெற்ற பணப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாகவும் தொழில் அதிபர் ரத்தினம் வீடுகளில் அமலாக்கத்துறை ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

