மலேசியாவில் இரும்புக் கடையில் வேலை செய்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபருக்குக் குறைந்த ஊதியம் வழங்கி, இரும்புக் கம்பிகளால் தாக்கிச் சித்திரவதை செய்து வருவதாகக் கூறி, தனது மகனைப் பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என அவரது தாய் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மனைவிஎலிசபெத் ராணி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: "எனது மகன் செல்வின் ராஜ் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் முகவர் ஒருவர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு இரும்புக் கடைக்கு வேலைக்கு அனுப்பி வைத்தோம்.
மாத ஊதியமாக ரூ.45,000 பேசப்பட்டு எனது மகன் வேலையில் சேர்ந்தான். அங்கு சென்ற பின், சூழ்நிலை காரணமாகச் சில நாட்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவச் செலவு எனக் கூறி, முதல் மாதச் சம்பளத்தில் பேசப்பட்ட ரூ.45,000-க்கு பதிலாக வெறும் ரூ.17,000 மட்டுமே வழங்கியுள்ளனர். இது குறித்து எனது மகன் தட்டிக்கேட்டபோது, அவரை இரும்புக் கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியும், கழிப்பறையைச் சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
தற்போது எனது மகன் மலேசியாவில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மிகவும் அச்சத்துடன் உள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உடனடியாகச் சமூகத் தலையீடு செய்து, மலேசியாவில் சித்திரவதைக்குள்ளாகும் எனது மகனைப் பத்திரமாக மீட்டு என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கடிதத்தின் நகல்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

